Pages

லில்லிபுட்டுவும் போலி சாமியாரும்

அது ஒரு அழகான நிலப்பகுதி.   அங்கு நான் ஓர் அடிமை.  என்னை அங்கு அடகு வைத்து இத்துடன் முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன.  பெற்றவர் என்னை கவனிக்காததால் நான் அங்கு சமூகத்தால் தள்ளி விடப்பட்டேன்.  என்னைப் பற்றி கவலைப்பட யாரும் இல்லை.  நானும் யாரைப் பற்றியும் கவலைப்பட்டதில்லை.  ஆனாலும் நான் அடிமை வாழ்க்கைப்புரிய வந்த இந்த இடம்.  என்னை இன்று சிந்திக்க வைத்திருக்கிறது.  ஏன் இந்த மாற்றம்.  எனக்கு ஒன்றும் புரியவில்லையே.  நான் அடிமை வாழ்க்கைப் புரியும் இந்த இடம் விசித்திரமான இடம்.   இது ஒரு ஆசிரமம்.  ஆமாம்.  பெரிய சாமியார் தான் இதனை நடத்திவந்தார். ஆம் அதுதான் அங்குள்ளவர்கள் அவருக்கு வைத்த பெயர்.  உண்மைப் பெயர் என்னவென்று இதுவரை யாரையும் நான் கேட்டதில்லை.  அதற்கு அவசியமும் ஏற்படவில்லை. சுற்றியும் மலை இருக்கும் அதன் நடுவில் சிறு கிராமமாக அமைந்த அழகான நிலப்பகுதியில் தான்  எங்கள் ஆசிரமம் இருந்தது.  அடிக்கடி ஊர் பெரியவர்கள் வந்து செல்லும் இந்த இடத்தில் பெரியசாமியாருக்கு நல்ல மரியாதை.  அந்த மரியாதையில் கொஞ்சம் எங்களுக்கும் கிடைக்கும்.  எதனைப் பற்றியும் கவலைப்படாத  எனக்கு அன்று ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.  ஆம் பெரியசாமியார் இறந்துவிட்டார்.  இதுவரை யாரைப் பற்றியும் கவலைப்படாத நான் அன்றுதான் முதன் முதலில் அழுதேன்.  அழுகையின் ஆழத்தை அப்போதுதான் உணர்ந்தேன்.  பெரியசாமியார் இறந்தவுடன் நான் அங்கிருந்து விடுதலை அடைந்திருக்க வேண்டும்.  இங்குள்ள மரங்களும் செடிகளும் குளிர்ந்த காற்றும் ஒரு சில நல்ல அடிமைகளும் என்னை அங்கிருந்து  அகல அனுமதிக்கவில்லை. 
வாழ்க்கையே வெறுமையாக இருந்த போதுதான் ஊர் தலைவர் அந்த ஆசிரமத்திற்கு லில்லிபுட்டுவைக் கண்காணிக்க நியமித்தார்.  அன்றைக்கு வந்ததுதான் முதல் தலைவலி.  பத்து அங்குல உயரமும் ஒன்பது அங்குல பருமனும் நீண்ட தாடியும் மொத்தத்தில் விசித்திர குள்ளர் பாரம்பரியத்தில் வந்த பெருமையும் சிறப்பும் உடையவர்தான் லில்லிபுட்.  இந்த லில்லிபுட்டுக்கு எங்கள் ஆசிரமத்தில்  சின்னசாமியார் என்று பெயர் எடுத்த போலிச்சாமியாரைப் பிடித்துப்போனது தான் இரண்டாவது தலைவலி. போலிச்சாமி எந்த நேரமும் நேர்மை, உண்மை, நாணயம் ஆகியவற்றிற்கு மகனாகப் பிறந்தது போல பேச்சை அமைத்து அங்குள்வர்களை ஏமாற்றும் ஏமாற்று மனிதர்.  அடிக்கடி ஊருக்குள் சென்று சமூகத்தை நான் உயர்த்த பிறப்பெடுத்துள்ளேன் என்று அங்கிருப்பவர்களை ஏமாற்றும் மாயாஜால வித்தை கற்வர். ஊரும் ஊர் மக்களும் இந்த ஆசிரமம் இறைப்பணியை இனியதக செய்ய அனைத்து உதவிகளை வாரி வழங்கினர்.  வருவாய் நாள்தோறும் பெருகியது.  வருவாயைக் கண்டவுடன் லில்லிபுட்டுவின் வாய் பிளந்தது. இதனைக் சற்றே கடைக்கண்ணால் கண்ட போலிச்சாமி லில்லிபுட்டுவின் வாயை மூடும் பெரு முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்.  ஆசிரம அடிமைகள் இறைப்பணியில் இன்பம் கண்டனர்.   அவர்களுக்கு லில்லிபுட்டுவும் போலிச்சாமியும் செய்யும் மறைமுக வருவாய்த் திருட்டுகள் தெரியாது. அதற்கு அவசியமும் ஏற்படவில்லை.
லில்லிபுட்டு பரதேசம் புறப்பட்டார்.  ஆசிரமத்திற்கு ஒரு சில முறை மட்டும் வந்து வருவாய் கணக்குப் பார்த்து பழைய மஞ்சள் துணியில் மூட்டை கட்டிச் சென்ற லில்லிபுட்டு இப்போது இல்லை.  தினமும் இரு முறை ஊரை வலம் வர போலிச்சாமி புறப்பட்டார். ஆசிரமத்திற்கு வருவாய் பெருகத் தொடங்கியது.  லில்லிபுட்டுவின் பங்கும் தனக்கே தன் பங்கும் தனக்னே என்று கும்மாளமிட்டுக் கொண்டாடினார் போலிச்சாமியார். அதனால் ஆசிரமத்திற்குள் ஊரின் கத்துக்குட்டிகள் வெறித்து வரத் தொடங்கின.  யார்யாரோ வந்தார்கள் சென்றார்கள்.  இங்குள்ள அடிமைகளுக்கு மரியாதை கிடையாது.  வரவேற்பும் கிடையாது.  இப்போதுதான் நானும் மற்றவர்களும் அடிமைகள் என்று உணர்ந்தோம். சிந்திக்கத் தொடங்கினோம். 
பால் வாங்கும் பாவனையில் பக்குவமாக கொள்ளை.  விளக்குமாறு வாங்கும் தோரணையில் அழகான கொள்ளை.  மணல் வாங்க மணற்கொள்ளை. கல் வாங்க கல் கொள்ளை என்று அடிக்கிச் செல்லலாம்.  தினமும போலிச்சாமியின் மஞ்சள்பை நிறைந்தது.  போலிச்சாமியின் பார்வை எங்கள் பக்கம் திரும்பியது.  எங்களுக்குக் கொடுக்கும் காலனா சம்பளம்  போலிச்சாமியின் கண்ணில் பட்டுவிட்டது.  இவன் கொள்ளை அடிக்க எங்கள் சம்பளத்தை பற்றியே பேச்சு அடிப்பட்டது.  வேண்டுமானால் அந்த காலனாவை எடுத்துக்கொள்.  எங்களை இறைப்பணி செய்ய விடு என்று மன்றாடினோம்.  ஆனால் அவன் திருந்தவில்லை.  அவன் கொள்ளை பற்றி ஆசிரமத்தில் ஒருசிலர் பேசுவதும் உண்டும்.  ஒருசிலர் அதனை அவன் காதுக்கு கொண்டு செல்வதும் உண்டு.  போலிச்சாமியாரைப் பற்றி யார் தவறாக பேசினார்களோ அவர்களை நாடு கடத்தும் பெருமுயற்சியில் போலிச்சாமி ஈடுபடத்தொடங்கினார்.  ஆசிரமம் இரண்டானது.  ஆசிரமத்தில் உள்ள எங்கள் அடிமைகள் உள்ளமும் இரண்டானது.  யார் காரணம் என்று சிந்தித்தோம் போலிச்சாமியார்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
 வாருங்கள் இணைந்திடுவோம் ஒன்றுபடுவோம் போராடுவோம் என்று அடிமைகள் ஒன்று கூடினோம்.  போலிச்சாமியாரை எதிர்த்து குரல்கொடுப்போம் என்று அனைவரும் புறப்பட்டோம்.
எங்களுக்குள்ளும் சில போலிகள் இருக்கவே செய்தனர்.  அவர்கள் வாயிலாக செய்தியறிந்த போலிச்சாமியார் நாங்கள் செல்லும்முன்பே ஊர்த்தலைவரைத் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தத்தொடங்கினார்.  ஊர்த்தலைவரிடம் போலிச்சாமியார் பேசுவது எங்களுக்குக் கேட்கிறது.  நாங்கள் அதிர்ந்து போனோம்.  எங்கள் கூட்டம் கலையத் தொடங்கியது.  போலிச்சாமியார் பக்கம் கூட்டம் சேர ஆரம்பித்தது.  போலிச்சாமியார் பற்றி குறைகூறியவர்கள் எல்லாம் என்னைவிட்டு விலகி போலிச்சாமியாரைச் சரணடைந்தனர்.  அதற்கு காரணம் போலிச்சாமியாரின் புதிய அறிவிப்புகள் தான் என்று கூறவேண்டும்.
அறிவிப்பு
ஆசிரமத்தில் தனக்கு ஜால்ரா தட்டுபவர்களுக்கு இன்றையிலிருந்து காலனா கூலியிலிருந்து அரையனா என்று உயர்த்திக் கொடுக்கப்படும்.  தினமும் ஊரைச் சுற்றிவர அனுமதி வழங்கப்படும்.  ஆசிரமத்திற்கு எதிராக (போலிச்சாமியாருக்கு எதிராக) யாரும் கூடினால் அல்லது பேசுவது போல தன் கனவில் தோன்றினாலும் கூட அவர் நாடு கடத்தப்படுவார்.
                                                                      இப்படிக்கு
                                                            உங்கள் சின்னசாமியார்.






நான் ஓர் அடிமை. எனக்குள் தோன்றும் உணர்வுகள் எதனையும் நான் வெளிப்படுத்த முடியாது என்பதை உணர்ந்தேன். நான் தனி மனிதன் என்று என்னை உணர வைத்தவர் மாண்புமிகு சின்னச்சாமியார். ஆசிரமம் முழுவதும் சின்னச்சாமியாரின் போலிகள் நிறைந்துள்ளனர்.  நாடெங்கும் சலுகைகள் அறிவிக்கும் போலிச்சாமியார்கள் நிறைந்துள்ளனர் என்பதை நான் அறிவேன்.  அதனால் புறப்பட்டேன்.  நிச்சயம் இனி இந்த நாட்டில் நான் இருக்க மாட்டேன்.  வேறுநாட்டிற்குச் செல்லலாம் என்று நினைத்துத்தான் புறப்பட்டேன்.  என் மனம் என்னை சிந்திக்க வைத்தது நாடு தாண்டியும் போலிச்சாமியார்கள் இல்லாமலா போவர்கள். நிறையவே இருப்பார்கள் போராடுவோம் போராடுவோம் என்று அதே ஆசிரம வாயிலில் நுழைந்துள்ளேன்.  இந்த மரங்கள் இந்த செடிகள் இந்த மண் இந்த தண்ணீர் இந்த காற்று இவையே என் சிந்தனையின் ஊற்றுகள் என் எண்ணங்கள் நிச்சயம் இவற்றால் கிராம மக்களின் உள்ளங்களில் தோன்றும்.  புரட்சி வெடிக்கும். போலிச்சாமியின் அதிகாரம் அழியும்.

அஜ்மூதீன்

Phasellus facilisis convallis metus, ut imperdiet augue auctor nec. Duis at velit id augue lobortis porta. Sed varius, enim accumsan aliquam tincidunt, tortor urna vulputate quam, eget finibus urna est in augue.

No comments:

Post a Comment